NUSA PENIDA ISLAND - பாலி பயணம் –

‘‘கடலில் ஒரு இலவச பாலி ஊஞ்சல்’’

நான்காவது நாள் – 22.03.2025 சனிக்கிழமை

இன்று  பாலித் தீவு அருகில் உள்ள NUSA PENIDA தீவுக்கு பயணப்படத் திட்டம்.  காலை 9 மணிக்குள் அனைவரும் காலை சிற்றுண்டி அருந்திவிட்டு, பஸ்ஸில் Sanur Harbour என்ற இடத்திற்கு சென்றோம். சுமார் 45 நிமிட பயணம்.


அங்கிருந்து ‘‘வேகப்படகு’’ மூலமாக சுமார் 75 நிமிடங்கள் ஆழ்கடலில் பயணம் செய்து NUSA PENIDA தீவை வந்தடைந்தோம்.

அங்கிருந்து அந்த தீவில் சுமார் நான்கு சுற்றுலா இடங்களுக்கு (Broken Beach, Angel Billabong, Kling king Clif & Crystal Bay) காரில் சென்று பார்வையிட்ட பிறகு, மதிய உணவும் அங்கேயே அருந்திய பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் இதே படகுப் பயணத்தில் பயணம் செய்து பாலித் தீவு வந்தடைய திட்டம்.

படகில் பயணிக்கும் போதே பல ஜோடிகளுக்கு ரொமான்ஸ் மூட் வந்துவிட்டது. அவர்கள் படகின் பின்புறம் சென்று கடலின் பயண வேகத்திலும் இறுகப்பற்றி போட்டோ ஷூட் நடத்தியது, எங்களுக்கும் ஒரு பொழுது போக்காக அமைந்தது.



சுமார் 75 நிமிடப் பயணத்திற்குப் பிறகு  Nusa Penida தீவின் கரையில் நாங்கள் இறங்கினோம்.

நான்கு நான்கு பேராக எங்களை ஒரு காரில் தீவுப்பகுதிகளுக்கு சுற்றிக்காட்ட ஒரு ஓட்டுனர் (அவரே நமக்கு வழிகாட்டி) உடன் வரிசையாக அனுப்பி வைத்தார்கள்.

நாங்கள் சுமார் 57 பேர் 15 கார்களில் வரிசையாக அந்த தீவு மலைப்பகுதி சாலைகளில் விர் விர் என்று பயணித்தது ஒவ்வொரு இடமாக பார்க்க கிளம்பினோம். ஏதோ ‘ஊமை விழிகள்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் அந்த கார் அணிவகுப்புப் பயணம் இருந்ததை உணர முடிந்தது.

எங்கள் வாகனம் மற்றும் ஓட்டுனர் இவர்:



முதலில் Broken Beach.

இந்தத் கடல்பகுதியில் முதலில் இறக்கிவிடப்பட்டு, சுமார் ஒரு மணி நேரம் செலவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம்.

நம் புகைப்படக் கலைஞர்கள் சீனுவும், ராஜுவும் சும்மா புகுந்து விளையாடி விட்டார்கள்.



முடிந்தவரை அவரவர் உடல் வலிவிற்கேற்ப அந்த கடல்கரை பகுதிகளில் ஏறி இறங்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

நானும், மனைவியும், புவனாவும், சிங்கை இராஜன் தம்பதியும் ஐந்து பேர் ஒரு மலைக்குன்றின் உச்சியில் ஏறி அங்கு கிடைத்த பரந்த நீலக்கடல் காட்சியும், வீசிய கடல் காற்றும் எங்களை அறியாமல் உற்சாகம் கொள்ள வைத்தது.

ஐந்து பேரும் சேர்ந்து ‘‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’’ பாடலை பாடி மகிழ்ந்தது, வாழ்வில் மறக்கவே முடியாத மகிழ்ச்சியான தருணம்.


எங்கள் மகிழ்ச்சி பாடல் வீடியோ இதோ யூ–டியூப்பில்:

https://youtube.com/clip/UgkxHjapyDZG8Ht8TUij_XFbYuEefjdfMguZ?si=HozYQViY_2p5bLFV

அடுத்து நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டது, Kling king Clif & Crystal Bay பகுதி.

அங்கு எங்களை இறக்கிவிட்டு, ஒரு மணி நேரத்தில் மீண்டும் காருக்கு வந்து, மதியம் உணவுக்குச் செல்லவேண்டும் என்று கூறினார், வழிகாட்டி.

இந்தப் பகுதி கார் நின்ற இடத்தில் இருந்து மிகவும்  கீழே நடந்து கடல்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதால் பாதிப் பேர் மட்டுமே கீழே கடல் பகுதிக்குச் சென்றோம். சரியான உச்சி வெயில். வியர்வையுடன் கீழே சென்ற எங்களுக்கு அடுத்த 10 நிமிடங்களில் பயங்கர அதிர்ச்சி.

இப்படியும் ஒரு 10 நிமிடத்தில் உச்சு வெயில் சூழல் மாறி பலத்த சூரைக் காற்றுடன் கனமழை பெய்யும் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் பாலி தீவுக் கூட்டங்களில் இந்த பருவநிலை மாற்றங்கள் மிகவும் சாதாரணம் என்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தங்களை காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிச் சென்று  கொண்டிருந்தார்கள். அங்கு பெரும்பாலான இடங்கள் தற்காலிக கட்டங்களாக இருந்ததால் அனைத்துக் கூரைகளும் பறந்தன.

இதோ, வீடியோவைப் பாருங்கள்:



எப்படியோ தப்பித்து எங்கள் வாகனத்தை கண்டுபிடித்து, நண்பர் பாலு, அவர் மனைவி கலை, வீடியோகிராபர் ராஜூ மற்றும் நான் நான்கு பேர் மதிய உணவுப் பகுதி நோக்கி பயணம் செய்து, உணவு விடுதியை அடைந்தோம்.

அங்கு உணவு அருந்தியபோது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது திடீர் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு அதிகரித்து, பாலி தீவுக்கும், நாங்கள் இருக்கும் Nuda Penida படகுத் துறைக்கும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது, என்ற செய்தியே அது. கடல் கொந்தளிப்பு தணியும் பட்சத்தில்தான் பயணம் நடைபெறும். இல்லையென்றால் இன்று இங்குள்ள படகுத்துறையில்தான் இரவு தங்கல் என்ற பயமுறுத்தும் செய்தியைக் கூறினார்கள், பயண ஏற்பாட்டாளர்கள்.

படகுத்துறையிலும், சிறிய கழிப்பறை வசதியைத் தவிர வேறு எந்த வசதியும் இல்லை. மாலை 6 மணிக்கு பாலியின் SUN and SAND Resortல் ‘காலா டின்னர்’ வேறு. எனக்கு தலை சுற்றியது.

இவ்வளவு பேரையும், அதுவும் சரிபாதி பெண்களையும் எப்படி இன்று  பத்திரமாக விடுதிக்கு அழைத்துச் செல்லப் போகிறோம். இரவு ‘காலா விருந்து’ வேறு பாலியில் பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்துள்ளேன். இங்கு படகுத்துறையில் எங்களையும் சேர்த்து சுமார் 300 பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கு இரவு உணவு கிடைப்பதும் கஷ்டம். கடவுளே காப்பாற்று..

ஒரு வழியாக கடல் அமைதியாகத் தொடங்கியது. படகு போக்குவரத்தும் ஆரம்பம் ஆனது. சுமார் 5.15 மணிக்கு எங்களுக்கும் படகு கிடைத்து நாங்களும் பாலித் தீவு நோக்கி பயணம் மேற்கொண்டோம், நம்பிக்கையுடன்.

ஆனால், எங்கள் நம்பிக்கை நடுக்கடலில் பொய்த்தது. ஆம். கடலில் மிகப்பெரும் அலைகள் தொடர்ந்து எழும்பி, படகை விரைவாக செலுத்த முடியாமல் தடை போட்டது. சிறிது சிறிதாக படகின் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் படகில் இயந்திரங்களை அணைத்துவிட்டார்கள். படகு கடல் அலைகளின் வேகத்திற்கு மேலே எழும்புவதும், கீழே இறங்குவதும் எங்கள் அனைவரையும் கடும் பயம் கொள்ளச் செய்தது.

ஒரு கட்டத்தில் பெண்கள் பலரும் அலரத் தொடங்கினார். இறுதியாக கொஞ்ச நேரத்தில் அலையின் வேகம் குறைந்த பிறகு படகின் இயந்திரங்கள் ஆன் செய்து படகு பாலி கரை நோக்கி செல்லத் தொடங்கியது. அப்பாடா அனைவருக்கும் உயிர் வந்தது.

அனைவரும் சொன்னது ‘‘Free Roller Coaster Experience’’ என்று. ஆனால் நான் நினைத்தது  ‘‘Free BALI SWING in SEA". ஆம். கடலில் ஒரு இலவச பாலி ஊஞ்சல்.





இறுதியாக சுமார் மாலை 6.30 மணிக்கு அனைவரும் பத்திரமாக பாலி கரை வந்து, பஸ்ஸில் ஏறி விடுதி வந்து சேர்ந்தோம்.

இந்த அதிர்ச்சியிலும், பயத்திலும் இருந்த அனைவரையும், நான் அடுத்து நடக்கக் கூடிய இரவு விருந்து ‘காலா டின்னர்’ பற்றி விரிவாகக் கூறி உற்சாகப் படுத்தினேன்.

என்ன ஆச்சரியம்.. அனைவரும் இந்த கவலையை மறந்து அடுத்த சந்தோஷத்திற்கு தங்களை தயார் செய்து கொண்டார்கள்.

சரியாக இரவு 7.00 மணிக்கு விடுதியில் இருந்து அனைவரும் புறப்பட்டு SUN & SAND Resort வந்து சேர்ந்தோம்.

‘காலா டின்னர்’ கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பமானது.

அனைவரும் ஒரே மனநிலையில் இருந்ததே இந்த ஒத்துழைப்பிற்கும், வெற்றிக்கும் காரணம்.

இந்த பயணத்தில் எனக்கு மனநிறைவு தந்த விஷயங்களில் ஒன்று எங்கள் குழுவில் (55 பேர்: 30 ஆண்கள், 25 பெண்கள்) இருந்த அனைத்து நண்பர்களும், குறிப்பாக பெண்களும் என் சொல்லுக்கு, வேண்டுகோளுக்கு மிகுந்த மரியாதை கொடுத்து , அதை பின்பற்றிய செயல்தான். 

அனைவருக்கும் நன்றிகள் பல.



Comments

  1. ஒரே நாளில் இயற்கை எழில்கண்டஉற்சாகமும் உயிரைக்கையில் கொண்ட அதிர்ச்சியும் திரும்ப கரைசேர்ந்த ஆச்சர்யமும் நிறைந்த அந்த அழகிய நிகழ்வைத் திரும்ப நினைவாய்த் தந்த ஆனந்தனுக்கு நன்றி. எதுவுமே நடக்காதது போன்று இயல்பாக இரவில்நடந்த நடனங்கள் மகிழ்வின் உச்சக்கட்டம் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தென் கைலாய யாத்திரை - வெள்ளியங்கிரி மலை சிவ யாத்திரை