கலைஞரும் நானும்!
எ ன் சிறுவயது முதல் கலைஞர் எனக்கு பரிச்சயமானவர். என் அப்பா தன் இளவயதில் கலைஞரால் கவரப்பட்டு தி.மு.க. அனுதாபி ஆனவர். இன்று தன் 86 வயதிலும் அதே உணர்வில் மாற்றம் காணாதவர். 1977ல் பாராளுமன்றத் தேர்தலில், என் 12 வயதில், பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனிவேல் ராஜனுக்கு வாக்கு சேகரிக்கும் குழுவின் சிறுவர் படையில் நானும் ஒருவனாக இருந்தேன். ஜனநாயக தேர்தல், வாக்கு சேகரிப்பு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் வெற்றி தோல்வி, பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை வானொலி மூலம் கேட்டல், முரசொலி, மாலைமுரசு, தினகரன் படித்தல், தேனி வாரச்சந்தை திடலில் கட்சித்தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களைக் கேட்டல் போன்ற பல நிகழ்வுகள் அன்றைய அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள அப்போதே வாய்ப்பாக அமைந்தது. ‘இம் என்றால் சிறை வாசம்.. ஏன் என்றால் வனவாசம்.. ஆதரிப்பீர் உதயசூரியன்’ என்ற தி.மு.க. தேர்தல் சுவரொட்டியை இன்றும் நினைவில் வைத்திருக்க முடிகிறது. மீண்டும் 1980 பாராளுமன்றத் தேர்தலில் திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்படுதல், அதில் கலைஞரின் பங்கு.. தேர்தலில் 40க்கு 38ல் வெற்றி, ‘நேருவின் மகளே வருக... ...