தென் கைலாய யாத்திரை - வெள்ளியங்கிரி மலை சிவ யாத்திரை
‘‘ஓம் நமச்சிவாய’’
‘‘தென் கைலாய யாத்திரை’’
என் கல்லூரி நண்பர் முனைவர். திரு.முத்துராலிங்கம் ஏற்பாட்டில் மற்ற இரு நண்பர்கள் முனைவர் திரு.வள்ளியப்பன் மற்றும் தமிழக அரசு மின்துறை நிர்வாகப் பொறியாளர் பொறிஞர். திரு. கலைச்செல்வன் உடன் கடந்த 16–04–2023 ஞாயிறு அன்று ‘‘கோவை அருகில் உள்ள வெள்ளியங்கிரி’’ மலைக்கு சென்று மலையில் இருக்கும் சிவனைப் பார்க்கலாம் என்று கிளம்பினேன்.
எனக்கு எந்த திட்டமும் இல்லை. நண்பர்களுடன் ஒரு ஆன்மீகப் பயணம். அதுவும் எனக்குப் பிடித்த ‘‘மலையேற்றம்’’. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5833 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் ‘‘சிவதரிசனம்’’. அவ்வளவுதான் தெரியும்.
நான் தற்போது கடல் மட்டத்தில் இருந்து 4000 அடி உயரம் உள்ள குரங்கணி மலையில் என் காப்பி தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வருபவன். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வளர்ந்தவன். தற்போது அந்த மலைமுகட்டில் வீடு கட்டி வசிப்பவன். சுமார் 10 கிலோ மீட்டர் மலையேற்றம் என்பது தேனியில் இருக்கும் போது என் தினப்பணிகளில் ஒன்று. ஆகவே இந்த பயணம் பற்றிய எந்த முன் தயாரிப்போ அல்லது ஆலோசனைகளோ நான் செய்யவில்லை.
16–04–2023 ஞாயிறு காலை கோவை சென்று இஷா மையம் அருகில் ஒரு அழகிய விடுதியில் (Celebrity Resort) தங்கினோம். பகலில் இஷா மையம் அனைத்தும் சுற்றிப் பார்த்து, அலைந்து, திரிந்து மாலை 5 மணிக்கு விடுதிக்கு வந்தோம். தூங்குவதற்குக்கூட நேரம் இல்லை. குளித்து, இரவு உணவு அருந்திவிட்டு சிறிது ஓய்வுக்குப்பின், எங்கள் ‘தென் கைலாய யாத்திரை’ தொடங்கியது.
யாத்திரை தொடங்கும் முன்னரே நண்பர் கலைச்செல்வனுக்கு வந்த தொலைபேசி செய்தி தொடர்பில் அவர் எங்கள் பயணத்திட்டத்தில் இருந்து விலகி ஊருக்குக் கிளம்பி விட்டார். மற்ற மூவருக்கும் பயணம் தொடர்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே உள்ளூர் நண்பர் ஒருவர் காரில் விடுதியில் இருந்து பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்து, வனத்துறை அலுவலர்கள் பாதுகாப்பு சோதனை முடித்து, வழித்துணைக்கு ஆளுக்கு ஒரு தடியுடன் முதல் படியில் சுமார் இரவு 10.15 மணிக்கு அடியெடுத்து வைத்தோம்.
இன்னும் இரண்டு நாட்களில் அமாவாசை தினம் வருவதால் பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவில்லை. என் தலையில் ஒரு பேட்டரி விளக்கும், முத்து கழுத்தில் ஒரு பேட்டரி விளக்கும் என்று அந்த இருள் சூழ்ந்த மலையில் நம்பிக்கையுடன் நடையைத் துவக்கினோம்.
இந்த மலை பற்றிய சிறு குறிப்பு:
1. மொத்தம் 7 மலைகளைக் கடக்க வேண்டும்.
2. 7–வது மலை உச்சியில் சுமார் 5833 அடி உயரத்தில் சிவன் தரிசனம்.
3. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை 13 கிலோ மீட்டர் தூரம். போய் வர 26 கிலோ மீட்டர் தூரம். செங்குத்தான மலைப்பாதையில் நடக்க வேண்டும்.
4. பாதை எங்குமே மின்சாரம், விளக்குகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் இல்லை.
5. அனைத்து மலைகளிலும் நடைபாதைகள் மிகவும் உயரமாகவும், சீரற்றும் இருக்கும்.
6. ஆங்காங்கே பாதைகளில் சிற்சில தற்காலிகக் கடைகள் இருந்தாலும் நீர் ஆகார பானங்கள் தவிர வேறு எதுவும் விற்பனைக்கு இல்லை.
7. முதல் மூன்று மலைகளில் ஆங்காங்கே படிகள் இருந்தாலும் அடுத்தடுத்த மலைகளில் படிகள் இல்லை.
8. மலைப்பாதை வருடத்தில் மூன்று மாதங்கள் பிப்ரவரி நடுவில் திறந்து மே நடுவில் அதாவது மாசி, பங்குனி, சித்திரை மட்டுமே திறந்து இருக்கும். வருடத்தில் மற்ற ஒன்பது மாதங்களில் யாரும் மலையேற இயலாது.
9. மற்ற நாட்களில் காட்டு விலங்குகள் அதிகம் இருந்தாலும் இந்த மூன்று மாதங்களில் மக்கள் நடமாட்டத்தால் விலங்குகள் விலகியே இருக்கின்றன.
10. இ
ரவில் மலையில் ஏற ஏற குளிரும் ஏறத்தான் செய்கிறது. ஏழாவது மலை உச்சியில் இரவில் சுமார் 5 முதல் 10 செல்சியஸ் டிகிரி குளிர் உள்ளது.
இனி எங்கள் பயணத்திற்கு வருவோம்:
மலையில் நாங்கள் ஏற ஆரம்பிக்க எதிர் வருபவர்கள் கைகளிலும், செல்போன்களிலும் விளக்குகளைப் பயன்படுத்தி விரைவாக இறங்கிக் கொண்டிருந்தனர். முதல் மலையைக் கடந்தவுடன் ‘வெள்ளைப் பிள்ளையார்’ என்ற கோவில் இருக்கிறது. இரவு சுமார் 12 மணி இருக்கும். மூவரும் ஆளுக்கு ஒரு ‘லெமன் சோடா’ அருந்திவிட்டு அங்கு 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்தோம்.
மலையேறும் ஆர்வத்தில் இரண்டாவது மலையையும் கடந்து வந்துவிட்டோம். மணி சுமார் இரவு 1.30 இருக்கும். இரண்டாவது மலை முடிவில் ‘பாம்பாட்டி சித்தர் குகை’ என்ற குகை உள்ளது. அங்கும் சுமார் அரைமணி நேரம் ஓய்வு எடுத்தோம்.
மலையேற்றத்தின் சிரமம் சிறுகச் சிறுகப் புரிய ஆரம்பித்தது. அடுத்து எவ்வளவு தூரம் என்று எங்கள் மூவருக்கும் தெரியவில்லை. எவ்வளவு நேரம் ஆகும் என்றும் கணிக்க முடியவில்லை.
எங்கு பார்த்தாலும் இருட்டு.. இருட்டு.. ஒரே இருட்டு... பறவைகள் சத்தம். சுமார் 4 மணி நேரம் நடைபயணத்தில் செங்குத்தான கற்படிகளில் ஏறி ஏறி வெறும் இரண்டு மலைகளை மட்டுமே கடந்து உள்ளோம்.
வரும் வழிகளில் பலரும் வெறும் தரையில், குளிரில் தங்கள் உடமைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சிவனை தரிசிக்க செல்லும் யாராக இருந்தாலும் இப்போது இந்த இருளில், குளிரில், பக்தர்கள் நடப்பதால் தொடர்ந்து எழும்பும் தொடர் புழுதிக் காற்றில், கற்கள், முட்கள் நிறைந்த மண் தரையில் என்று உட்காந்து, எழுந்து, சுவாசித்து, படுத்து, உறங்கித்தான் செல்ல வேண்டும். உடலின் ‘அனைத்து சுகங்களையும்’, தலையின் ‘அனைத்து கனங்களையும்’, மனதின் ‘அனைத்து நினைவுகளையும்’ இந்த இடத்தில் இறக்கித்தான் ஆக வேண்டும். அத்துனை கடினமாக உணர ஆரம்பித்தோம்.
இன்னும் 5 மலைகள் கடக்க வேண்டும். நினைத்தாலே தலை சுற்றியது. இரவு தூக்கமும் எங்கள் கண்களைக் கட்டியது. களைப்பு, சோர்வு, இன்னும் இருக்கும் தூரம் எதுவும் தெரியாமல் நண்பர் வள்ளியப்பன் பின் வாங்கினார். மெதுவாக ‘முனகல்’ ஆரம்பித்தார். ஆனால் நண்பர் முத்துவின் உறுதி எங்களை மூன்றாவது மலை நோக்கி நகர்த்தியது.
மூன்றாவது மலையைக் கடக்க எங்களுக்கு சுமார் 90 நிமிடங்கள் ஆகிற்று. மிகவும் சோர்ந்து போனோம். மீண்டும் முத்துதான் இருவரையும் சரிக்கட்டி மேல்நோக்கி நடத்திச் சென்றார்.
நான்காவது மலையின் பாதி வழியில் சுமார் அதிகாலை 4.00 மணிக்கு வள்ளியப்பன் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டார். இத்துடன் அவர் மலையேற்றத்தை நிறுத்திக் கொள்வதாகவும், இங்கேயே தரையில் படுத்து, உறங்கி விடிந்தவுடன் சூரிய உதயம் பார்த்துவிட்டு, கிளம்பி அடிவாரம் நோக்கி மலையிறக்கம் செய்வதாகவும் கண்டிப்புடன் கூறி ‘‘ஓம் நமச்சிவாய’’ என்று தரையில் சாய்ந்து விட்டார்.
முத்துவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் என் முகத்தைப் பார்த்தார். எனக்கு அவர்கள் இருவர் முகமும் விளக்கு வெளிச்சத்தில் தெரிகிறது.
மலையேற்றமா...? அல்லது மலையிறக்கமா...? இதுவே என் முன் உள்ள கேள்வி.
யோசித்துப் பார்த்தால் தற்போதுதான் பாதித்தூரம் வந்துள்ளோம். தற்போதே மணி அதிகாலை நான்கு. சுமார் 6 மணி நேரமாக இரவில் தூங்காமல் மலையேறி வந்துள்ளோம். இனி எப்போது மலை உச்சிக்கு சென்று மீண்டும் இந்த ஏழு மலைகளையும் இறங்கிக் கடந்து விடுதி வந்து அடுத்து வீடு வந்து சேரப்போகிறோம்? ஒன்றுமே புரியவில்லை.
நண்பர் வள்ளியப்பன் முடிவுதான் எனக்கும் சரியென்று பட்டது. என் குரங்கணி மலைப்பாதைகளில் நான் நடந்த பயணம் மற்றும் பயிற்சி எல்லாம் இங்கு எடுபடவே இல்லை. எதை நம்பி யோசிக்காமல் இங்கு மலையேற வந்தேனோ அந்த நம்பிக்கை முழுவதும் நானும் இழந்து விட்டதாகவே நினைத்தேன். தன்னம்பிக்கைத் குறையத் தொடங்கியது. முத்து முகம் பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை. எங்களை நம்பி இவ்வளவு தூரம் ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்து விட்டு, பாதி மலையில் மீதி வழியில் எங்களை அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற வருத்தத்தை முகம் பிரதிபலித்தது. எங்கள் இருவரையும் 4வது மலையில் விட்டுவிட்டு தான் மட்டும் மீண்டும் எப்படி பயணத்தைத் தொடர்வது என்ற குழப்பம் அவர் முகத்தில் இருந்ததைக் கண்டேன். மேலும் இவ்வளவு முயற்சி செய்து, இவ்வளவு தூரம் மலையேறி வந்து சிவபெருமானை தரிசிக்க முடியாமல் போய் விடுமோ என்ற ஏமாற்றம் அவர் வார்த்தைகளில் தெரிந்தது.
யோசித்தேன். உடலா? மனமா? இந்த இடத்தில் நான் உடல் வலியை மறந்து, தாங்கிக் கொண்டு மன வலிமை பெற்று பயணத்தை தொடர்தல் மட்டுமே நன்மை பயக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். இத்தனை தூரம் இனி ஒரு முறை வருவது சாத்தியம் இல்லை என்பதும் விளங்கியது.நான் எப்பொழுதும் இலக்கு நோக்கி பயணிப்பவன். எனவே எங்கள் இலக்கை அடையாமல் இந்த பயணம் நிறைவடையக் கூடாது என்று நினைத்தேன். வள்ளியப்பனும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். எங்கள் இருவரின் பயணம் தொடரவும், வெற்றி பெறவும் வாழ்த்தும் தெரிவித்தார். நண்பேன்டா..!
அதிகாலை 4 மணிக்கு 5வது மலை நோக்கிப் பயணம் தொடர்தோம். நான்கு பேராக ஆரம்பித்து தற்போது இரண்டு பேராக நடந்து கொண்டிருக்கிறோம். என்ன செய்ய...?
5வது மலையும் கற்களும், முட்களும், படிக்கட்டுகளுமாய் இருந்தது. 6வது மலைப்பகுதி சற்று சமதளமும், ஏற்றமும், இறக்கமுமாய் இருந்ததால் விரைவாக நடக்க முடிந்தது. ஏறத்தாழ 8 மணி நேரமாக இரவு தூங்காமல் இப்படி வைராக்கியமாக நடப்பதே மிகப்பெரிய காரியமாக இருந்தது. சுமார் அதிகாலை 5.45 மணிக்கு 6வது மலையின் முடிவுக்கு வந்தடைந்தோம். கடைசி மலையான ஏழாவது மலையும், சிவபெருமான் இருப்பிடமும் அந்த இருளிலும் மக்கள் தங்கள் கைகளில் ஏந்தியபடி நடக்கும் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. மிகவும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி. பக்தர்களின் கைவிளக்கு வெளிச்சத்தில் அந்த ‘தென்கைலாச மலையே’ ஜொலித்தது.
ஆனால், என் உடலில் உள்ள அத்தனை செல்களும் தங்கள் சக்தியை இழந்ததை மூளை உணர்த்தியது. நண்பர் முத்துவிடம் சொன்னேன். ஒரு அரைமணிநேரம் உறங்கிச் செல்வோம். என்னால் முடியவில்லை என்றேன். அவர் இது உறங்குவதற்கு ஏற்ற இடம் அல்ல. பாறை உச்சியில் படுத்துறங்குவது மிகவும் ஆபத்து என்றார். என் இயலாமை அவருக்கும் புரிந்திருக்கும் போல. ஏதோ நானும் கடைசியில் பின்வாங்கி விடுவேனோ, நான் கடவுளை தரிசிக்க இயலாமல் போய் விடுமோ என்று யோசித்து ஒரு யோசனை சொன்னார்.
நான் அரை மணி நேரம் ஒரு பாறை படுகையில் படுத்து தூங்கிக் கொள்ளவும், அவர் விழித்திருந்து என்னை பார்த்துக் கொள்வதுமாகக் கூறினார். நானும் உடனே அசந்து பாறையில் படுத்துத் தூங்கிவிட்டேன். ‘முத்து நீ தலைவன்’. என் வலி அறிந்து வலி போக்கியவன்.
சிறிது சிறிதாக கண் இமைகள் தாண்டி சூரிய வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. மணி அதிகாலை 6.20. மெதுவாக கண் திறந்து பார்த்தேன். நண்பர் முத்து என்னையும், உதிக்கும் இளம்சூரியனையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் உடன் சுதாரித்து எழுந்து மீண்டும் கடைசி மலையான ஏழாவது மலை நோக்கி பயணம் புறப்பட்டோம். அழகான சூரிய உதயத்தைக் கண்டோம். விடியல் வந்ததால் கைலாச நாதர் எழுந்தருளி இருக்கும் ஏழாவது மலையின் உச்சி தெரிந்தது. அதே நேரம் இதுவரை இல்லாத அளவில் மிகவும் உயரமாகவும், செங்குத்தாகவும் மலை இருந்தது மிகவும் அதிர்த்தியாகவும் இருந்தது. என்ன செய்ய.. இலக்கை அடைந்தாக வேண்டும். சிவனை தரிசித்தாக வேண்டும். அதுவே இலக்கு.
ஆறாவது மலை முடிவில் ஒரு பெரிய சரிவு பாதையில் மரம், செடி, கொடிகளைப் பிடித்துக் கொண்டு இறங்கினோம். அங்கே ஒரு பெரிய ஓடை. காலைக் குளிரில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. பலரும் அதில் குளித்து மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
நாங்கள் கொண்டு வந்த உணவு மற்றும் தண்ணீர் அனைத்தும் பெரும்பாலும் தீர்ந்து விட்டது.
ஏழாவது மலை தொடக்கத்தில் அந்தக் குளிரில் ‘சுக்குமல்லிக் காபி’ போட்டு ஒரு முதியவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் அருகில் சென்று அந்த விறகு அடுப்பில் கொஞ்ச நேரம் குளிர்காய்ந்து கொண்டே அந்த சுக்குமல்லிக் காப்பியை சுவைத்தது மறக்க இயலாத ஒன்று. அருகில் ஒரு சிறிய குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அது மலையில் உள்ள ‘சுனைநீர்’. ஆகா... என்ன அற்புதம்... என்ன சுவை.... வயிறு நிறைய தண்ணீர் குடித்து, எங்கள் பாட்டில்களிலும் தண்ணீர் பிடித்துக் கொண்டோம். கைலாச நாதரை நெருங்கும் தருவாயில் நமக்கான தேவைகளும் கிடைக்கின்றன. ஆச்சரியமே!
தற்போது சுமார் காலை 7.15 மணி. ஏழாவது இறுதியான மலை உச்சிக்குவந்து விட்டோம். சுற்றியுள்ள மலைகளின் முகடுகளையும் அருகில் பார்க்கிறோம். சூரியனின் இளம் வெப்பத்தையும் நன்கு உணர்கிறோம். மலைஅடிவாரப் பள்ளத்தாக்கு பகுதிகள், தண்ணீர் ஓடைகள், சிறுவாணி அணைத்தேக்கம், பறவைகளின் காலை ஒலிகள் அனைத்தும் ‘‘கானக்கிடைக்காத காட்சிகள்’’.
பக்தர்கள் மலைக்கு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார்கள். நாங்களும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
சரியாக காலை 7.35 மணிக்கு எங்கள் இலக்கை அடைந்தோம். ஆம். தென்கைலாச மலையின் உச்சியை அடைந்தோம். முந்தைய இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.35 மணிக்கு வந்தடைந்தோம். சுமார் 9 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் தூங்காமல் தொடர்நடை. அந்த இடத்தில் எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கடவுளை தரிசிக்கச் சென்றோம். அந்த அதிகாலையிலும் சுமார் 300 பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நாங்களும் ஐக்கியம் ஆனோம்.
காலை 8.00 மணிக்கு கடவுளுக்கு மலர் சூடி அதிகாலை பூஜை நடைபெற இருந்தது தெரிந்தது. எங்களுக்கோ மிகவும் மகிழ்ச்சி. இத்தனை கஷ்டப்பட்டு மலையேறி வந்ததிற்கு கடவுள் நமக்கு நல்ல காட்சி கொடுக்க உள்ளார் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
கடவுள் அருகில் சென்றோம். என்ன ஆச்சரியம்! எந்த கோவில் கட்டுமானங்களும் இல்லை. மலை உச்சியில் உள்ள பாறை இடுக்கில் கல்தரையில் மூன்று சிறிய வடிவிலான சிவலிங்கங்கள் மற்றும் சில உருவங்கள் இருந்தன. இவைகள் யாரும் செதுக்காத ‘சுயம்புலிங்கங்கள்’ என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
பூவினால் நன்கு அலங்காரம் செய்திருந்தார்கள். தேவாரம், திருமறை போன்ற தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டன. மலையெங்கும் ‘ஓம் நமச்சிவாய’ என்னும் கோஷம் எதிரொதித்தது. மிகவும் சாதாரண, எளிமையான சாதுக்கள்தான் பூஜைகள் செய்தார்கள். தலைமை சாது ஒவ்வொருவருக்கும் நெற்றி முழுவதும் விபூதி பூசி லிங்கம் வரைந்தார். பல மணி நேரம் நடந்து சிவனை சில நிமிடங்களே தரிசிக்க முடிந்தது. சாதாரண இளைஞர்களே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களை ஒழுங்கு படுத்தினார்கள். எங்குமே தட்சணை இல்லை. உண்டியல் இல்லை. கொடுத்தாலும் அந்த எளியவர்கள் வாங்க மறுக்கிறார்கள். சிவனுக்கு செய்யும் தொண்டாகவே அவர்கள் செயல்படுகிறார்கள். தேவைக்கு சிறிது உணவை மட்டுமே பெறுகிறார்கள்.
தரிசனம் முடித்து சுமார் 8.40 மணிக்கு மலையடிவாரம் நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது. நன்றாக வெளிச்சம் வந்து விட்டதால் எங்களால் சுற்றுப்புற இயற்கைக் காட்சிகளை மலை உச்சியில் இருந்து நன்றாக பார்க்க முடிந்தது. நாங்கள் ஏறிவந்த மலையின் உயரத்தையும் பார்த்து ஆச்சரியப்பட முடிந்தது. இத்தனையும் முடிந்தது இறைவன் அருளாள் என்பதையும் உணர முடிந்தது.
மெதுவாக கீழ்நோக்கி நடக்க ஆரம்பித்தோம். மேல்நோக்கி நடந்ததை விட உடல் எடையை சமன்படுத்தி, கால்கள் வழுக்கி விடாமல் படிகள் இல்லாத மண் தரைப் பாதையில் அடியெடுத்து வைத்து நடப்பது மிகவும் சவாலாக இருந்தது.
எங்களிடம் இருந்த மிகக்குறைந்த உணவை மட்டுமே காலை உணவாக உட்கொண்டு கீழ் நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தோம். வெயில் ஏற ஏற எங்கள் நடையும் மிகவும் கடினமாக இருந்தது. சுமார் மதியம் 1.00 மணி அளவில் இரண்டாவது மலை ‘பாம்பாட்டி சித்தர் கோவில்’ வந்தடைந்தோம். அங்கு ஒரு லெமன் சோடா சாப்பிட்டு விட்டு பயணம் தொடர்ந்தோம்.
முத்துவுக்கு சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இடதுகால் ஒத்துழைக்க மறுத்தது.
எனவே மிக மிக மெதுவாகவே அடுத்து இறங்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் நானும் மிகவும் களைத்துப் போனேன். இருவரும் எப்படியோ சுமார் மாலை 5.15 மணி அளவில் அடிவாரம் வந்தடைந்தோம்.
17–04–2023 காலை 8.30 மணிக்கு இறங்கத் தொடங்கி மாலை 5.15 மணி அளவில்தான் கீழே வந்து சேர்ந்தோம். சுமார் 8 மணி நேரம் இறங்கும் பயணம். ஆக முந்தைய நாள் இரவு 10 மணிக்குத் தொடங்கிய மலைப்பயணம் அடுத்த நாள் மாலை 5.15 மணிக்கு முடிந்தது. இரவுத் தூக்கமே இல்லாமல், சரியான உணவும் இல்லாமல் சுமார் 19 மணிநேர நடை பயணம்.
60 வயதை கடந்த முத்துவுக்கும், 60 வயதை நெருங்கும் எனக்கும் இது நிச்சயம் சாத்தியமே இல்லை. ஆனால் இது சாத்தியமாயிற்று. எப்படி...? என்ன காரணம்...?
இறைவன் அருளா..? மனிதன் முயற்சியா...? சொல்லத் தெரியவில்லை.
ஆனால் நிச்சயம் இப்படியான பயணம் ஒரு மனிதனுக்கு தன்னை சுயபரிசோதனை செய்ய, தன் நம்பிக்கையை வலுப்படுத்த, தன் உடல் வலிமையை சோதிக்க, தன் அறச்சிந்தனைகளை ஊக்குவிக்க, தன் மனவலிமையை அதிகரிக்க, எளிமையான வாழ்வை நோக்கிய எண்ணங்களை வளர்க்க, தன்னாலான தர்மங்களைச் செய்ய தூண்டுதலாக அமைவதாக இருக்கிறது என்பதை நான் உறுதியாகச் சொல்லுவேன்.
எனக்கும் அப்படித்தான் இருந்தது.. இருக்கிறது..
சில இடங்களுக்கு வாழ்வில் ஒரே ஒரு முறைதான் போய்வர முடியும். அது வடக்கில் இமயமலையில் அமைந்திருக்கும் ‘‘கைலாச மலை’’ என்பது ஐதீகம். இந்த ‘‘தென்கைலாச மலையும்’’ அப்படித்தான் என்பது போய் வந்தவர்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. என் கருத்தும் அதுதான்.
மனித வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பயணங்கள் நீளும்போது தேவைகள் எளிமையாகவும், சுருக்கமாகவும் இருக்க வேண்டும் -என்பதே இந்தப் பயணத்தில் நான் உணர்ந்த கருத்து.
‘‘மனித வாழ்க்கைப் பயணம் கடினமானவையே’’ - ஆனாலும் ‘‘வாழ்தல் இனிது’’.
‘‘ஓம் நமச்சிவாய’’


Comments
Post a Comment