கலைஞரும் நானும்!
என் சிறுவயது முதல் கலைஞர் எனக்கு பரிச்சயமானவர். என் அப்பா தன் இளவயதில் கலைஞரால் கவரப்பட்டு தி.மு.க. அனுதாபி ஆனவர். இன்று தன் 86 வயதிலும் அதே உணர்வில் மாற்றம் காணாதவர். 1977ல் பாராளுமன்றத் தேர்தலில், என் 12 வயதில், பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனிவேல் ராஜனுக்கு வாக்கு சேகரிக்கும் குழுவின் சிறுவர் படையில் நானும் ஒருவனாக இருந்தேன். ஜனநாயக தேர்தல், வாக்கு சேகரிப்பு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் வெற்றி தோல்வி, பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை வானொலி மூலம் கேட்டல், முரசொலி, மாலைமுரசு, தினகரன் படித்தல், தேனி வாரச்சந்தை திடலில் கட்சித்தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களைக் கேட்டல் போன்ற பல நிகழ்வுகள் அன்றைய அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள அப்போதே வாய்ப்பாக அமைந்தது. ‘இம் என்றால் சிறை வாசம்.. ஏன் என்றால் வனவாசம்.. ஆதரிப்பீர் உதயசூரியன்’ என்ற தி.மு.க. தேர்தல் சுவரொட்டியை இன்றும் நினைவில் வைத்திருக்க முடிகிறது.
மீண்டும் 1980 பாராளுமன்றத் தேர்தலில் திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்படுதல், அதில் கலைஞரின் பங்கு.. தேர்தலில் 40க்கு 38ல் வெற்றி, ‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சியைத் தருக..’ என்ற தேர்தல் வாசக சுவரொட்டி போன்றவை இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.
1981ல் கல்லூரிக்கு சென்றபிறகு என் நெருங்கிய தோழர்கள் அனைவருக்கும் கலைஞரின் திறமை, ஆளுமை, தமிழ், அரசியல் ஆகியவற்றை எனக்கு தெரிந்த வரையில் தொடர்ந்து விளக்கி, விவாதித்து அவர்களையும் தி.மு.க. அனுதாபிகளாக மாற்ற முயற்சி செய்துள்ளேன். 1983ல் இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து எங்கள் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி மாணவர் பேரவை சார்பில் மிகப்பெரிய கண்டன ஊர்வலம் நடைபெற்றது. அதற்கான ஏற்பாடுகளில் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ள கலைஞரின் தமிழ் உணர்வுப் பேச்சும் முக்கிய இடம் வகித்தது.
என் கல்லூரி காலத்தில், ஆனந்தவிகடன் பொன்விழா நடைபெற்ற நேரத்தில் கலைஞர் அதில் பங்கு கொண்டதும், கலைஞரின் கவியரங்கம் நடைபெற்ற விபரங்களும் அவரின் பேச்சுக்களும் ஆனந்தவிகடன், முரசொலியில் படித்து சிலிர்த்ததை இன்றும் உணர முடிகிறது. தன் எழுத்தின், பேச்சின் மூலம் எங்கோ இருக்கும் ஒரு தமிழ் இளைஞனுக்கு உணர்வும், உணர்ச்சியும் ஊட்ட முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம்.
1984ல் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின் போது காரைக்குடியில் கலைஞரின் தேர்தல் பிரச்சாரம் காண பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் இருந்து சைக்கிளில் சென்று விடிய விடிய காத்திருந்து, கலைஞர் வருகையும் அவரின் தேர்தல் பிரச்சார முழக்கத்தையும் கல்லூரி நண்பர்களுடன் பார்த்து, கேட்டு, விடிந்தபிறகு கல்லூரி விடுதிக்கு வந்தது, இன்றும் நினைவில் இருக்கிறது.
1985க்குப் பிறகு சென்னை தினமலர் பத்திரிகையில் வேலையில் சேர்ந்தபோது அரசியல் செய்திகள், தலைவர்கள் செயல்பாடுகள் போன்றவற்றை இன்னும் தெளிவாக அருகில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. சக பத்திரிகை நண்பர்களுடன் விவாதிக்கவும் முடிந்தது. 1986ல் சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கலைஞர், பேராசிரியர் தலைமையில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தை நடத்தி கைதானார்கள். சென்னையில் பணியில் இருந்ததால் மிக ஆர்வமாக நான் பார்த்த முதல் ‘கலைஞர் போராட்டக்களம்’ அது. 1987ல் சென்னையில் இலங்கை தமிழர் ஆதரவு பேரணி டி.ஆர்.பாலு தலைமையில், கலைஞர் நடந்துவர நடைபெற்ற பேரணியின் ‘கம்பீரம்’ இன்னும் என் கண்முன்ணே தெரிகிறது.
1988ல் தேனாம்பேட்டையில் என் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது இயல்பாக அது கலைஞர் அருகிலேயே அமைந்தது. ஆம் என் அலுவலக முகவரி 421, அண்ணா சாலை. கலைஞரின் அலுவலக முகவரி அண்ணா அறிவாலயம், 369, அண்ணா சாலை. ஆம், சில அடிகள் தூரத்தில் கலைஞரின் பக்கத்து அலுவலக நபராக அவரை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 30 வருடங்களாக அது தொடர்கிறது..
அடுத்து 1989ல் சட்டமன்ற தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையை எலிகண்ட் பப்ளிசிடி மூலம் ‘கம்ப்யூட்டர்’ வழியாக அச்சுக் கோர்க்கும் பணி என் நிறுவனத்திற்குக் கிடைத்தது. அதன் பிறகு பல ஆண்டுகள் அறிவாலயத்திற்கும், எனக்கும் அலுவல் ரீதியான தொடர்புகள் தொடர்ந்தன. கலைஞரின் பல கையெழுத்துப் பிரதிகளை நாங்கள் கம்ப்யூட்டர் மூலம் தட்டச்சு செய்து கொடுத்துள்ளோம். அந்தத் தேர்தல் முதல் 2016 சட்டமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல் களத்திலும் தி.மு.க. எப்படி தன் பணிகளை ஆற்றியது என்பதை அறிவாலயம் அருகில் இருந்து பார்த்து வந்துள்ளேன்.
‘முரசொலி’ பத்திரிகைக்கும், கலைஞரின் ஆஸ்தான டிசைனர் ‘அரசு ஆர்ட்ஸ்’ மூலமாகவும் என் தமிழ் எழுத்துருக்களை (FONTS) அவர்களுக்கு கொடுத்து, தி.மு.க.வின் பிரச்சார பதிப்புகள் பல என் எழுத்துருக்களிலும் (FONTS) வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன.
1989ல் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற கலைஞர் ‘வள்ளுவர் கோட்டத்தில்’ பிரதமர் வி.பி.சிங் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார். பத்திரிகை நண்பருடன் நான் பங்கேற்ற ‘கலைஞரின் முதல்வர் பதவியேற்பு விழா’ அது. 1990ல் கனிமொழி திருமணம் அறிவாலயத்தில் நடைபெற்றதில் பங்கேற்றது முதல், பல கவியரங்கங்கள், கூட்டங்கள் என்று தொடர்ந்து அறிவாலயத்தில் நடைபெற்ற பல அரங்குகளில் கலைஞரை தொடர்ந்து பார்த்து, ரசித்து வந்துள்ளேன்.
1991ல் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இராஜீவ்காந்தி படுகொலை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் திமுக மீது நடைபெற்ற வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, கண்டிக்க அவர் அறிவாலயம் முன்புதான் ஒரு அவசர பொதுக் கூட்டத்தைக் கூட்டினார்.
1991 சட்டமன்ற தேர்தலில் திமுக மரணஅடி பெற்ற போதும், அப்போது வெளியான காவிரி நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் தமிழர்கள் மேல் நடைபெற்ற தாக்குதல்களை நிறுத்தக் கோரி நடைபெற்ற திமுக கண்டன கூட்டமும் அறிவாலயத்தின் முகப்பிலேயே நடைபெற்றது. அதில் தமிழர்கள் தன்னை தேர்தலில் நிராகரித்த போதும், கலைஞர் கர்நாடக தமிழர்களை காக்க கர்ஜித்த ஒலி இன்றும் என் காதுகளில் கேட்கிறது. இவைகளில் ஒரு நெருங்கிய பார்வையாளனாக பார்த்திருக்கிறேன். பங்கேற்றிருக்கிறேன்.
1999ல் பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் முயற்சியில் முரசொலி மாறன் தலைமையில் நடைபெற்ற ‘தமிழ்நெட்99’ தமிழ்க்கணினி மாநாட்டில் கலைஞர் இன்னும் நெருங்கி வந்தார். இரண்டுநாள் நடைபெற்ற மாநாட்டில் வெகுநேரம் கலைஞர் உடன் இருந்தார். முதல் நாள் மாநாட்டின் இரவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் விருந்தளித்தார். கலைஞருடன் விருந்துண்ட முதல் அனுபவம் அது. இரண்டாவதும் அவர் எங்களுக்கு விருந்தளித்து உபசரித்தது 2010 செம்மொழி மாநாட்டு வெற்றி விழா
கூட்டத்தில். இந்த இரண்டு கணினித்தமிழ் மாநாடுகள் மூலம் தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழை முன்னோக்கி பயணிக்க முக்கிய காரணமாக இருந்தார், கலைஞர்.
2005ல் அறிவாலயம் எதிரில் விஜயராகவா தெரு – அண்ணா சாலை சந்திப்பில் குடிவந்தேன். இப்படியாக என்னை அறிந்தும் அறியாமல் கலைஞர் என் வாழ்நாளின் பெரும்பகுதியில் என்னுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறார் என்ற உணர்வு, பிம்பம், பிரமிப்பு என்னுள் உண்டு. ஒவ்வொருமுறை அவர் அலுவலகம் வரும்போதும், திரும்பும் போதும், அறிவாலயத்தில் இருக்கும்போதும் பல பல முறை என் வாழ்நாளில் ஏதேச்சையாக பார்க்கும் முகமாகவே இருந்திருக்கிறார்.
அதேபோல் அவரின் 2006–11 ஆட்சி காலத்தில் அவர் மேல் இருந்த ஈர்ப்புகள் குறையத் தொடங்கியது. அதற்கு பல காரணங்கள். அரசு மற்றும் அரசியல் நடத்தும் விதத்தில் அவரிடம் பெரிய மாற்றங்கள். குறிப்பாக ‘2009 ஈழப் போரில்’ அவரின் செய்கைகள் பலருக்கும் ஏற்புடையது அல்ல. என்னைப்போன்ற பலரும் கலைஞரின் எதிர்வினை நடவடிக்கைகளை நேரடியாகப் பார்த்து கொதித்த காலகட்டம். கலைஞரா இப்படி? கலைஞர் இப்படி இருக்கக் கூடாது என்ற புலம்பல் பலரிடம். அதற்கு திமுக தந்த பதில் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா என்பதே? ஐயா எங்களுக்கு உணர்வூட்டியவர் கலைஞர். அதனால் அவரே இப்படி எங்கள் உணர்வை சிதைக்கலாமா? என்றுதான் கேட்டோம்.
அதே அறிவாலயம் முன்பு 2008 கடைசியில் மனிதச்சங்கிலிப் போராட்டம் கலைஞர் ஏற்பாட்டில். கலந்து கொண்டோம். கடற்கரையில் கலைஞர் உண்ணாநோம்பு... இதில் கலைஞர் கேலிப் பொருள் ஆனார். எங்களைப் போன்றவர்களின் ஆதங்கம் என்னவென்றால் 2008–09 காலகட்டங்களில் ஈழப்போரில் தமிழர்களுக்கு கலைஞர் உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்பதே. அதற்கான விலையை அவர் இன்று இறுதி நாட்களிலும் தந்துகொண்டுதான் இருக்கிறார். தன் இன மக்களை எப்பொழுது ஒரு மன்னன் கைவிடக் கூடாதோ, அந்த தவிர்க்க முடியாத தருணத்தில் தன் இன மக்களை கைவிட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்றும் பலமாக ஒலிக்கிறது.
ஏன் கலைஞர் அவ்வாறு நடந்துகொண்டார் என்பதற்கு பல பதில்கள் உண்டென்றாலும், அவர் ‘அறத்தின்’ படி அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது என்பதே பலரின் எண்ணம். ‘அறம் தவறினார் கலைஞர்’. அன்றே அவரின் பிம்பம் என்னுள் உடைந்தது.
அதன்பிறகு 2016 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அவர் பங்கேற்ற சில தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தாலும் என்னை வெகுவாக கவரவில்லை. இந்த வயதிலும், உடல்நிலையிலும் அவர் பதவிக்காக இப்படி அலைகிறாறே என்றே நினைக்கத் தோன்றியது. தற்போது காவிரி மருத்துவமனையில் அவரின் வாழ்வுக்கான போராட்ட நிமிடங்கள்... அனைவரையும் அவர் பற்றி சிந்திக்க வைக்கிறது. ஆம்.
ஒரு தகப்பன் தன் மகனுக்கு பல நன்மைகளும், சில தீமைகளும் செய்திருந்தாலும், அவரின் கடைசி நாட்களில் அவரைக் காணும் மகனுக்கு, தன் தகப்பனால்தான் தனக்கு இத்துனை உயர்வு வந்தது என்ற பாசத்தில், அன்பில், உணர்வில் அவரை நேசித்து உருகும் நிலை வருமே... அதே நிலையில் இன்று என்னைப் போன்ற தமிழர்கள் பலரும்...
உங்களால்தான் மொழி உணர்வு பெற்றோம். கல்வி பெற்றோம். உங்களையே விமர்சிக்கும் அறிவு பெற்றோம். தற்போது உணர்கிறோம் கலைஞரே... உங்களின் இந்த நீண்ட நெடிய அரசியல் பயணம் தமிழினத்தை உயர்த்தி உள்ளது. நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். உங்கள் முழு வாழ்க்கையும் தமிழ் இனத்தின் விடியலுக்காக பயன்பட்டுள்ளது என்று.
தமிழ் இனம் தன்னை நன்றி மறந்து, கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாக மிதந்து தமிழன் கரைசேர பயன்படுவேன் என பலமுறை கூறிய கலைஞரே, இதோ தமிழ் இனம் உன்னை நன்றியோடு நினைக்கிறது.
– வள்ளிமகன்.
Heart touching Machan
ReplyDelete